பாகிஸ்தான் உளவாளிகளுக்கு போலி சிம் கார்டு விநியோகம் : 18 மொபைல் பறிமுதல் – அசாமில் 5 பேர் கைது

Scroll Down To Discover
Spread the love

அசாமில் பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு சிம் கார்டு விற்றதான குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அசாமில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு விற்பதாக ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, நாகோன் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாம், உத்தின், ரஹ்மான், ஜமான் மற்றும் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பாருல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மீதமுள்ள 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

கைதானவர்கள் மற்றும் தலைமறைவானவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் 18 மொபைல் போன்கள், 136 சிம் கார்டுகள், ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு தூதரகத்துக்கு அனுப்பும் கருவி, கை ரேகை ஸ்கேனர், பிறப்பு சான்றிதழ்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கைதானவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.