மங்களூரு, கோவை குண்டு வெடிப்பு – ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Scroll Down To Discover
Spread the love

தமிழ்நாடு கோவையில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 23-ந்தேதி இரவு கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவர் காரில் உடல் கருகி உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் அதாவது நவம்பர் மாதம் 19-ந்தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் ஆட்டோவில் கொண்டு சென்ற குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் பயங்கரவாதி ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த ஷாரிக் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில், இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றியும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினும், மங்களூரு பயங்கரவாதி ஷாரிக்கும் கோவையில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஷாரிக் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவி, நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும், கேரளாவில் தங்கி இருந்து பார்சல் மூலம் வெடிபொருட்களை வாங்கியதும், அவருக்கு மத்திய மற்றும் தெற்காசியாவில் இருந்து டார்க்நெட் இணையதளம் மூலம் பணம் அனுப்பி வைக்கப்பட்டதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய தனியார் ஊடகம் மூலமாக 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அக்டோபர் மாதம் 23-ந்தேதி கோவையில் நடந்த கார் வெடிப்பு, நவம்பர் மாதம் 19-ந்தேதி மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ‘தமிழ்நாடு கோவை, கர்நாடகத்தின் மங்களூருவில் எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினர். பா.ஜனதா மற்றும் இந்திய ராணுவத்துக்கு எதிராக எங்களுக்கு விரோதம் உள்ளது. அவர்களுக்கு எதிராக தென்னிந்தியாவில் எங்களின் முஜாகிதீன்கள் போரை நிகழ்த்தினர். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எங்கள் முஜாகிதீன்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.