பிரதமர் மோடி ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகிறது – அண்ணாமலை

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகவும், முழு அதிகாரத்துடனும் செயல்பட்டு வருகின்றன என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஜனநாயக விரோதம், சட்டவிரோதம் என்று டி.ஆர்.பாலு விமர்சித்திருக்கிறார்.

எப்போதெல்லாம் நம் நாட்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதோ, உடனடியாக தி.மு.க.வினருக்கு அவர்கள் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், வாரிசுகள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகளும், அமலாக்கத்துறை வழக்குகளும் ஞாபகத்துக்கு வந்து, மூக்கு வியர்க்கும்.

மடியில் கனம் இருந்தால் பயம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே? தி.மு.க. அமைச்சர்களும், எம்.பி.க்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு போய் வந்து கொண்டு இருப்பது பொதுமக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். டி.ஆர்.பாலுவுக்கு தெரியாமல் இருக்குமா? நாளை அவரது கட்சியிலும் யாராவது கைதாகும் நிலை வந்தால் மற்ற கட்சிகளின் ஆதரவு வேண்டுமே என்று பெயருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

தி.மு.க. அரசையோ, முதல்-அமைச்சரையோ சமூக வலைதளங்களில் விமர்சித்தாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தி.மு.க., ஜனநாயகத்தை பற்றி எல்லாம் பேசலாமா? ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அ.தி.மு.க. அரசின் அமைச்சர்கள் மேல் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டதையெல்லாம் மக்கள் மறந்துவிடவில்லை. பிரதமர் மோடி ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகவும், முழு அதிகாரத்துடனும் செயல்பட்டு வருகின்றன. குற்றம் செய்தவர்களின் குற்றங்கள் கோர்ட்டில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு, அதற்கான தண்டனையை பெறுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.