காஷ்மீர் பண்டிட்டை கொன்ற 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

Scroll Down To Discover
Spread the love

ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சஞ்சய் சர்மாவை சுட்டுக் கொன்றவர் உட்பட 2 தீவிரவாதிகள் என் கவுன்ட்டரில் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அச்சன் பகுதியில் வசித்து வந்தவர் பண்டிட் சஞ்சய் சர்மா. வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றிய சர்மா, 26-ம்தேதி காலையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிரவாதிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், புல்வாமா மாவட்டம் பட்கம்புரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில் போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியை சுற்றி வளைத்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த தீவிரவாதிகளில் ஒருவர் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாவை சுட்டுக் கொன்றவர் என போலீஸார் தெரிவித்தனர். அவரது பெயர் அகிப் முஸ்தாக் பட் என்றும் தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் (டிஆர்எப்) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இவர் ஏற்கெனவே பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை காஷ்மீர் மண்டல காவல் துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.