கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் மரணம்..!

Scroll Down To Discover
Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாணிக்கம் (26) மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கடந்த 2 நாட்களாக கபடி போட்டி நடைபெற்று வந்துள்ளது.

இதில் திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காச்சக்காரன்பட்டியை சேர்ந்த மாணிக்கம் என்ற 26 வயது இளைஞர் கபடி போட்டியில் தனது நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார். நேற்று இரவு 2 சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று 3வது சுற்று போட்டிக்காக ஓய்வு எடுத்திருந்த நிலையில், திடீரென நெஞ்சு வலிப்பதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரது நண்பர்கள் வாகனத்தின் மூலம் அருகில் உள்ள அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் அறிவுறுத்தியத்தின்பேரில் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது வரும் வழியிலேயே மாணிக்கம் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இளைஞர்களுக்கு ஏற்கனவே இருதய பாதிப்பு இருந்து அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.