அன்புஜோதி ஆசிரமம் வழக்கு : சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

Scroll Down To Discover
Spread the love

அன்புஜோதி ஆசிரமம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி இல்ல ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உள்ளிட்ட பல புகார்கள் வெளியாகின. இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ’’தமிழகத்தில் பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் சம்பந்தப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்கள் உடலுறுப்புகளுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. பலபேர் காணாமல் போயுள்ளனர். ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களின் மரணம் தொடர்பாக முறையான ஆவணங்கள் இல்லை. கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு என 3 மாநிலங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதால், அன்புஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.