சதுரகிரியில் மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை..!

Scroll Down To Discover
Spread the love

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

சதுரகிரி கோவிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு நாளை (18-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. மகா சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பகலில் 4 கால பூஜைகளும், இரவில் 4 கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்ற உள்ளன.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாணிப்பாறை மலைஅடிவாரப் பகுதிக்கு சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நாளை மகா சிவராத்திரி என்பதால், தாணிப்பாறை வழியாக, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலை ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு எனவும், ஆனால் கோவிலில் பக்தர்கள் நாளை இரவில் தங்கி வழிபட அனுமதி இல்லை என்றும் சாப்டூர் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “சாப்டூர் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் என்பதால், இரவு நேரத்தில் பக்தர்கள் தங்கி வழிபட அனுமதி இல்லை” என்று கூறினர்.