பிரியாணி சாப்பிட்ட கல்லூரி மாணவி சாவு: ஒரே வாரத்தில் 2வது பலி..!

Scroll Down To Discover
Spread the love

ஆன்லைன் மூலம் பிரியாணி வாங்கி சாப்பிட்ட கேரளா கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் பிரியாணி சாப்பிட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள உதுமா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீபார்வதி (21). இவர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆன்லைன் மூலம் குழிமந்தி பிரியாணி வாங்கினார்.

அதை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காசர்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அஞ்சுஸ்ரீ பார்வதியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அஞ்சுஸ்ரீ பார்வதி உயிரிழந்தார்.

அஞ்சுஸ்ரீ பார்வதியின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் பரியாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அஞ்சுஸ்ரீ பார்வதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோட்டயத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை நர்சான ரஷ்மி என்பவர் அல்பாமா சிக்கன் மற்றும் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு இறந்தார். தற்போது குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி அஞ்சுஸ்ரீ பார்வதி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.