தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு ரூ.19,744 கோடி -மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Scroll Down To Discover
Spread the love

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு ரூ.19,744 கோடி நிதி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: ”பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கு ஆரம்பகட்டமாக ரூ.19,744 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில், SIGHT திட்டத்திற்கு ரூ.17,490 கோடியும், முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும், இதர செலவினங்களுக்கு ரூ.388 கோடியும் பிரித்து வழங்கப்படும். மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இத்திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதுடன் அவற்றை செயல்படுத்தும். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த முதலீடு ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக புதைபடிம எரிபொருள் இறக்குமதி குறையும். ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மெட்ரிக் டன் கிரீன் ஹவுஸ் வாயு உமிழ்வு குறைக்கப்படும்.

பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குதல், தொழிற்சாலை கார்பன் உமிழ்வை குறைத்தல், புதைபடிம எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உள்நாட்டு உற்பத்தி மேம்பாட்டு திறன்களை அதிகரித்தல் உட்பட ஏராளமான பயன்கள் இந்த இயக்கத்தின் மூலம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.