இந்தியா, பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வீரர் காலமானார் – பிரதமர், உள்துறை அமைச்சர் இரங்கல்.!

Scroll Down To Discover
Spread the love

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு போர் மூண்டது. இந்த போரில் இந்தியா சார்பில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த நாயக் அந்தஸ்து பெற்ற வீரரான பைரோன் சிங் ரத்தோர் பங்கேற்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக கடுமையாக போரிட்டார்.

அவரது வீரதீர செயலுக்காக கடந்த 1972-ம் ஆண்டு சேனா விருது வழங்கப்பட்டது. இதன்பின்பு 1987-ம் ஆண்டு நாயக் ஆக பணியில் இருந்து ரத்தோர் ஓய்வு பெற்றார். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், பைரோன் சிங் ரத்தோர் (81), சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நம்முடைய தேசத்திற்கு சேவையாற்றியதற்காக வீரர் (ஓய்வு பெற்ற) பைரோன் சிங் ரத்தோர் நினைவு கூரப்படுவார். நமது தேச வரலாற்றில் நெருக்கடியான நேரத்தில் பெரும் துணிச்சலை வெளிப்படுத்தியவர். அவரது மறைவால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த துயரம் நிறைந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் கலந்துள்ளன. ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் பைரோன் சிங் ரத்தோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.