11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!

Scroll Down To Discover
Spread the love

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருந்து வருகிறது. உதாரணமாக, தாம்பரம் கோட்டத்தில் அதிகபட்சமாக 6,79,239 மின் இணைப்புகளும், கூடலூர் கோட்டத்தில் குறைந்தபட்சமாக 68,022 மின் இணைப்புகளும் உள்ளன. பணிகளை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில், நிர்வாக அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும் என 2021-22ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகளை சமநிலைப்படுத்துவதற்காகவும், நிர்வாக பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், அன்றாட நடவடிக்கைகளில் வேலையை துரிதப்படுத்துவதற்காகவும், மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டும், பொதுமக்களின் புகார்களின் மீது உடனடி தீர்வு காண்பதற்காகவும், அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் விரைந்து செயல்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மறுசீரமைப்பு நடவடிக்கையாக ஏற்கனவே உள்ள 176 மின் பகிர்மான கோட்டங்களுடன், கூடுதலாக சென்னை மாவட்டம் – சேப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் – சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டம் – பென்னாகரம், விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணைநல்லூர், திருப்பூர் மாவட்டம் – ஊத்துக்குளி, திண்டுக்கல் மாவட்டம் – வேடசந்தூர், பெரம்பலூர் மாவட்டம் – ஜெயங்கொண்டம், விருதுநகர் மாவட்டம் – சாத்தூர், சேலம் மாவட்டம் – கெங்கவள்ளி ஆகிய இடங்களில் புதிதாக 11 மின் பகிர்மான கோட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைவர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டனர்.