தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 15% குற்றங்கள் குறைந்துள்ளது- டிஜிபி சைலேந்திரபாபு

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை வந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் கோவை மாநகர காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த டிஜிபி,பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் சன்மானம் வழங்கி பாராட்டினார்.

இதனைத் தொடந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு: கோவை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க சுந்தராபுரம், கரும்புகடை, கவுண்டம்பாளையம் பகுதியில் 3 புதிய காவல் நிலையங்கள் வரப்போகிறது. தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்கள் குறைந்தால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என கூறலாம். அதன்படி, கடந்த வருடத்தில் 1,597 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 1,368 கொலைகள் மட்டும் நடந்துள்ளன. 15 சதவீதம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. ஆதாய கொலைகள் 89 நடந்த நிலையில், அதற்போது 79ஆக குறைந்துள்ளது. கொள்ளை வழக்குகள் 111ஆக இருந்தது தற்போது 96ஆக குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதான் பெரிய குற்றங்களை கண்டறிய உதவுகிறது. தற்போது போலீசாருக்கு நவீன தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு உள்ளது. சுமார் 75 ஆயிரம் குற்ற பின்னணி உள்ளவர்களின் போட்டோ, வீடியோ வைத்துள்ளோம். சந்தேகப்படும் நபர்களை போலீசார் ஒரு புகைப்படம் எடுப்பதன் மூலம் குற்றவாளியின் பின்னணி தெரியும் வகையில் அந்த தொழில்நுட்பம் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் கடந்து குற்ற சம்பவங்கள் செய்பவர்களை கண்காணித்து வருகிறோம். கஞ்சா கடத்தல் தடுக்கவும், கேரளாவில் இருந்து பயோ மெடிக்கல் வேஸ்ட் தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க 6 இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி பகுதியில் கண்காணித்து வருகிறோம். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் முக்கியமாக வெளி மாநில வாகனங்களை கண்காணிக்க டோல்கேட்டில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இணையவழி குற்றங்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில், தமிழகத்தில் 45 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. படித்தவர்கள் ஏமாறும் சூழல் இருக்கிறது. பான் கார்டு இணைக்க சொல்லி ஏமாற்றுதல், திருமணம் என சொல்லி பெண்களை ஏமாற்றி வருகின்றனர். லோன் கொடுப்பது போன்று ஏமாற்றுதல், போட்டா மார்பிங் செய்து அதிக வட்டியில் பணத்தை கட்ட சொல்லி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புகைப்படம் அனுப்பும் குற்றங்கள் நடந்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டில் ஆசை காட்டி பணத்தை திருடுவது போன்ற குற்றங்களும் நடக்கிறது. இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.