காசி-தமிழகம் இடையே புதிய ரயில் சேவையாக “காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்” விரைவில் அறிமுகம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

காசி தமிழ் சங்கமம் விழாவை நினைவுகூறும் வகையில், காசி-தமிழகம் இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான தொன்மையாக நாகரிக பிணைப்பை புதுப்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் விழா கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடக்க உள்ளது. இவ்விழாவையொட்டி காசியில் நடக்கும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகள் ரயில் மூலமாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில், வாரணாசி ரயில் நிலையத்தில் நேற்று தமிழக பிரதிநிதிகளை வரவேற்று பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், ‘‘காசி தமிழ் சங்கமம் விழாவை நினைவுகூறும் வகையில் காசி-தமிழகம் இடையே புதிய ரயில் சேவையாக காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும். விமான நிலையங்களுக்கு இணையான வசதிகளை ரயில் நிலையங்களில் செய்ய வேண்டுமென்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி, வாரணாசி நகரில் உள்ள ரயில் நிலையங்கள் ரூ.7,000 கோடியில் உலகத்தரத்திற்கும் மறுசீரமைக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில்களுக்கான படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கப்படும்’’ என்றார்.