கார்த்திகை தீபதிருநாள் : திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல்

Scroll Down To Discover
Spread the love

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

மகா தீபத்தை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் அறிவித்துள்ளார். திருவண்ணாமலைக்கு நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய http://tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்வேலி 9445014428, நாகர்கோவில் 9445014432, தூத்துக்குடி 9445014430, கோயம்புத்தூர் 9445014435, தலைமையகம் 9445014435, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.