அரசு பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Scroll Down To Discover
Spread the love

சென்னையில் பஸ் பயணத்தின்போது, டிக்கெட் வாங்க வரும் பயணிகளிடம் ‘சில்லரையா கொடுங்கப்பா..’ என்று கூவி கூவி கண்டக்டர்கள் கேட்டு வாங்கிய காலம் போய், இன்றைக்கு சில்லரைகளை கொடுத்தாலே கண்டக்டர்கள் கடுப்பாகும் நிலையே நிலவுகிறது.

குறிப்பாக ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள். பலர் ‘நோட்டே இல்லையா?’ என்று கேட்கிறார்கள். சிலர் முணுமுணுத்தபடியும், திட்டிக்கொண்டும் வாங்குகிறார்கள். இன்னும் சிலர் ‘இது செல்லாது’ என்று கூறி அந்த நாணயங்களை திருப்பி கொடுத்து விடுகிறார்கள். ஏற்கனவே கடைகளில் ஒதுக்கப்படும் இந்த ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் தற்போது பஸ்களிலும் புறக்கணிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் தொடக்கத்தில் இந்த நாணயங்கள் அறிமுகமான போது ஆசையுடன் வாங்கிய மக்கள், இப்போது அதை கையில் வைத்திருக்கவே தயங்குகிறார்கள்.

கண்டக்டர்கள் தரும் கெடுபிடியால் கொதித்து போன மக்கள் போக்குவரத்து துறையிடம் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை அளித்து வருகிறார்கள். பொதுமக்களின் புகாரை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து கண்டக்டர்கள், மண்டல-கிளை-உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநகர பஸ்களில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கண்டக்டர்கள் உரிய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் மீண்டும் அது அறிவுறுத்தப்படுகிறது.

எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பெற்றுக்கொள்ள கண்டக்டர்கள் மறுக்கக்கூடாது. இதனை மீறி ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கண்டக்டரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து கண்டக்டர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.