பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்! மண் காப்போம் கருத்தரங்கில் ஆலோசனை

Scroll Down To Discover
Spread the love

“பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் விவசாயிகள் நல்ல லாபம் பார்க்கலாம்” என மண் காப்போம் இயக்கத்தின் கருத்தரங்கில் வேளாண் வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் நெல் சாகுபடி தொடர்பான இயற்கை விவசாய கருத்தரங்கம் ஆற்காட்டில் இன்று (நவம்பர் 13) நடைபெற்றது. விளாப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

2 கிலோ விதை நெல்லில் 90 மூட்டை (7,000 கிலோ) மகசூல் எடுத்த தெலுங்கானாவைச் சேர்ந்த சாதனை விவசாயி நாகரத்தினம் நாயுடு நெல்லில் அதிக மகசூல் எடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நுணுக்கங்களை எடுத்துரைத்தார். நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் குறித்தும், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பிரபல பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம் ஆலோசனை வழங்கினார்.

மதுரையை சேர்ந்த தான்யாஸ் நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் மணி அவர்கள், பாரம்பரிய அரிசியை மதிப்புக்கூட்டி விற்பதன் அவசியம் குறித்து விரிவாக பேசினார். மேலும், பாரம்பரிய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுத்து தமிழக அரசின் விருது பெற்ற பெண் விவசாயி அம்பாசமுத்திரம் லட்சுமி தேவி அவர்கள் நெல் சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும் பாரம்பரிய நெல் இரகங்களிலும் அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள் பற்றியும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இது தவிர பாரம்பரிய விதைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, களையெடுக்கும் கருவிகளின் கண்காட்சியும் இக்கருத்தரங்கில் இடம்பெற்றது.