வாட்ஸ் அப் தகவலை நம்பி.. செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டவர் மரணம்.!

Scroll Down To Discover
Spread the love

வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி உடலை மினுமினுப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காக செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஆம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (25). அவரது நண்பர் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த ரத்தினம் (வயது 35). இவர்கள் இருவரும் கல்குவாரி தொழிலாளர்கள்.

இந்நிலையில், செங்காந்தள் செடியின் கிழங்கை பச்சையாக சாப்பிட்டால் மினுமினுக்கும் சருமத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம் என வாட்ஸ் அப்பில் வந்த தகவலை இருவரும் பார்த்துள்ளனர். மருத்துவரின் ஆலோசனை எதுவும் கேட்காமல் வாட்ஸ்அப் தகவலை அப்படியே நம்பிய இருவரும், செங்காந்தள் செடியை கண்டுபிடித்து பிடுங்கி கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை அவர்களின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார். ரத்தினத்திற்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர். வாட்ஸ் அப்பில் வரும் தகவலை அப்படியே நம்புவது மிகப்பெரிய ஆபத்து என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.