பருவமழை எதிரொலி : தொற்று நோயினை தவிர்க்க குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணியை தொடங்கியது குடிநீர் வாரியம்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழ்நாட்டில் பெய்து வரும் பருவமழையின் பாதிப்புகளை தடுக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே, தண்ணீர் தேங்கும் இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருவதோடு, பள்ளங்கள் உள்ள பகுதிகளில் விரைவாக பணியை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுகாதாரத்துறை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு மக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோயினை குளோரின் மாத்திரை வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதற்காக 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுவதோடு, குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றுநோய் பரவாமல் இருக்க குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு 15 லிட்டர் குடிநீரில் ஒரு குளோரின் மாத்திரையை கலந்து இரண்டு மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழையின் காரணமாக சென்னையில் தினதோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அளவிற்கு அதிகமான குடிநீரை பொதுமக்கள் சேமித்து வைக்க வேண்டாம் என்றும் குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.