ஏழைகளின் வறுமையை போக்கியவர் பிரதமர் மோடி – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

Scroll Down To Discover
Spread the love

ஏழைகளின் வறுமையை போக்கியவர் பிரதமர் நரேந்திர மோடி,” என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.

கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பட்டணத்தில், மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: மத்திய அமைச்சர் ஒருவர் இப்பகுதிக்கு வருவது இதுதான் முதல் முறை என்று கூறுகின்றீர்கள். மாநில அமைச்சர்கள் இதுவரை இப்பகுதிக்கு வரவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன். கடந்த சில நாட்களில் கோவைக்கு நான்கு மத்திய அமைச்சர்கள் வந்து, மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளனர்.

இங்குள்ள முதல்வர், நான்கு அமைச்சர்களால் என் தூக்கம் போய்விட்டது எனக்கூறியுள்ளார். இதில் இருந்து மத்திய, மாநில அமைச்சர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில், 46 லட்சம் விவசாயிகளுக்கு, 7,700 கோடி ரூபாய், விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், 28 மாதங்களாக, 80 கோடி ஏழை மக்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.பிரதமர் மோடி ஏழை குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காக உழைக்கிறார். அவருக்கு, ஏழைகளின் கஷ்டங்கள் தெரியும். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, ஏழைகளின் வறுமையை போக்கியவர் பிரதமர் மோடி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.