80 கோடியில் பேனா சின்னம் கட்டுவதால், என்ன பயன்..? விவசாயிகள் கூறுவது என்ன..?

Scroll Down To Discover
Spread the love

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடந்தது.அப்போது, விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில், ‘தெர்மகோல்’ பேனாவுடன் வந்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது: டெல்டா மாவட்டத்தில், 2021 – 22 ஆண்டு பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான இன்சூரன்ஸ் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

உடனே பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயை வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது, வெறும் நுாறு ரூபாய் அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதிக்காக, பேனா நினைவு சின்னம் 80 கோடி ரூபாயில் கட்டுவதால், யாருக்கு என்ன பயன்; அதற்கு பதிலாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்பு கிடங்கு கட்டினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இந்த கோரிக்கைகளுக்கு, அரசு செவி சாய்க்காவிட்டால், கோட்டை முன் உண்ணாவிரதம் இருப்போம்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.