மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரம் -புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்துறை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையே புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகும் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது தனியார் மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டுகொண்டதின் பேரில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் மின்துறை தனியார் மயத்திற்கான டெண்டர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘புதுச்சேரி அரசு மின்துறையை ஏலம் ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விநியோகத்தில் 100 சதவீத பங்குகளை வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள். முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலத்தாரர்கள் ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தவேண்டும். ஏலம் எடுக்கும் நிறுவனத்தின் வங்கி செக்யூரிட்டியாக ரூ.27 கோடி வங்கி கணக்கில் இருக்க வேண்டும். முன் மொழிவுக்கான கோரிக்கை வருகிற 30-ந் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் மாதம் 25-ந் தேதி மாலை 4 மணி ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மின்துறை ஊழியர்கள் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டதை கண்டித்து இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர். இதுகுறித்து மின்துறை பொறியாளர்-தொழிலாளர் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு பொதுச்செயலர் வேல்முருகன் கூறுகையில் ‘புதுச்சேரி மின்துறை தனியார் மயத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தலைமை அலுவலகத்தில் அனைத்து பொறியாளர்களும், தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளோம் என்றார்.