ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு – 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!

Scroll Down To Discover
Spread the love

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 2,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை, அடுத்த மாதம் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் பருவத் தேர்வுகள், காலாண்டு தேர்வுகள், இந்த மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகின்றன. அக்டோபர் 1 முதல் 6ம் தேதி வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்கு வெளியூர் செல்வோரின் வசதிக்காக, அரசு போக்கு வரத்துக் கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்க உள்ளன.இது குறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன், போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக, சென்னையில் மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து, வரும் 30ம் தேதியும், அக்டோபர் 1ம் தேதியும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 2,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இணைப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அதேபோல் மற்ற ஊர்களில் இருந்து, வரும் 30 மற்றும் அடுத்த மாதம் 1ம் தேதிகளில், 1,650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து, திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள்; போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பஸ்கள்; திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம். காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள்; திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள் அனைத்தும், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பணிமனைக்கு அருகில் உள்ள பைபாஸ் சாலையில் இருந்து புறப்படும் இவை தவிர, மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், வழக்கம்போல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.மேலும், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் பஸ்களும் வழக்கம்போல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தே புறப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.