நவராத்திரி திருவிழா – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 26-ந்தேதி தொடக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி வரை நடக்கிறது.

இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி, இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேலும் கொலு சாவடியில் அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம். நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.

அதன்படி 26-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.