இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ்..!

Scroll Down To Discover
Spread the love

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு மலேரியா, காசநோய், ஹீமோகுளோபின், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றை கண்டறிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்திய தர கவுன்சிலின் அங்கமான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் ஆய்வகங்களுக்கான தேசிய தர உறுதி சான்றிதழை வழங்கி வருகின்றன.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் தளவாய்பட்டினம், திருப்பத்தூர் மாவட்டம் பாச்சூர், ராமநாதபுரம் மாவட்டம் வெங்கிட்டாங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆகிய இடங்களில் செயல்படும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர நிர்ணய வாரியத்தின் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்தன.

இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த 5 சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் தர உறுதி சான்றிதழை வழங்கி உள்ளன.

பெங்களூருவில் நடந்த தேசிய மாநாட்டில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் 5 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் இந்த தர சான்றிதழ்களை வழங்கியது.இந்த சான்றிதழை பெற்றதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறைக்கு வாழ்த்து தெரிவித்தார்.