ஆத்மியை உடைக்க லஞ்சம் கொடுக்க முயற்சி – பாஜக சதி செய்வதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு புகார்..!

Scroll Down To Discover
Spread the love

டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியவுக்கு எதிராக சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில், தனது கட்சியை உடைக்க பாஜக சதி செய்வதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு சுமார் ஏழு ஆண்டுகளாக ஆட்சி நடத்திவருகிறது. இந்த அரசு 2021-22 புதிய மதுக் கொள்கையை கொண்டுவந்தது. அதன்படி, மதுபானங்களை சில்லறை விற்னை செய்து கொள்ளவும், வீட்டிற்கே டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கொள்கை இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசே வாபஸ் பெற்றது.

இந்த கொள்கை அமல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு பெரும் ஊழல் செய்ததாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். மதுபான நிறுவனங்கள், பார்களுக்கு வழங்கிய டென்டரில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர், சுங்க அமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தின.

இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறிய மனிஷ் சிசோடியா, இதில் இருந்து தப்பிக்க தன்னை பாஜகவில் சேர்ந்து கொள்ள பேரம் நடைபெற்றதாகவும் அவர் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், தங்களின் ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக சதித் திட்டம் தீட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்“தங்கள் எம்எல்ஏக்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்னாத் பாரதி, குல்தீப் ஆகியோரை பாஜக தலைவர்கள் அணுகியுள்ளனர். அவர்களை பாஜகவில் சேரக் கூறி ரூ.20-25 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது. இதை நாங்கள் எதிர்கொள்ளத் தயார். குஜராத் தேர்தல் வரை இதுபோன்ற ரெய்டு, மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்” என பாஜக மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை பாஜக தரப்போ, ஊழல் செய்த மனிஷ் சிசோடியா விரைவில் சிறை செல்வார் என திட்டவட்டமாக கூறுகிறது.