அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Scroll Down To Discover
Spread the love

மின்சார சொகுசுப் பேருந்துகள் மூலம் பயண நேரத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இ.ஐ.வி 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மும்பையில் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும், நகர போக்குவரத்து அமைப்பை சீரமைக்கும் நோக்கில் குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பசுமை போக்குவரத்து தீர்வுகள் மீதான வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்து வருவதால், மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக, அரசின் தொலைநோக்கு, கொள்கைகள் உள்ளதாக தெரிவித்தார்.

மும்பையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இ ஐ வி 22 பேருந்து, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மின்சார இரட்டை அடுக்கு பேருந்து ஆகும், இதில், பயணிகளின் பாதுகாப்புக்காக அதிநவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆட்டோ மொபைல் வாகன எரிபொருளை பொருத்தவரை டீசலை விட, மின்சாரம் அதிக விலை கொண்டது. கச்சா எண்ணெய் இறக்குமதி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சூரிய சக்தி பயன்பாடு, மின்சாரத்திற்கான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது என்று தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் 35 சதவீத மாசு ஏற்படுவதாகவும், மின்சாரம், எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் டீசல் ஆகிய மாற்று எரிபொருளை இந்தியா உபயோகப்படுத்துவதற்கான நேரம் இது எனவும் தெரிவித்தார்.