மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விபத்து: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.!

Scroll Down To Discover
Spread the love

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில் குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து 17 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார். மேலும், இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:-
17 பேர் இறந்தது வேதனையளிக்கிறது. குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல். சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட உரிமையாளர் சிவசுப்பிமணியன்

சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மேலும் தலா ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதையடுத்து, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும். மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும். அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி பலர் உடனிருந்தனர்.