பாஜக பிரமுகரின் பண்ணை வீட்டில் விபச்சாரம் – காவல்துறை சோதனையில் 6 சிறார்கள் மீட்பு..!

Scroll Down To Discover
Spread the love

மேகாலயா மாநில பாஜக துணைத் தலைவர் பெர்னார்டு என் மராக். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது. இங்கு விபச்சார தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு அதிரடி சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது விபச்சார தொழிலில் ஈடுபட்ட 73 பேர் பிடிபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் நான்கு சிறுவர்கள், இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட ஆறு சிறார்களும் அடக்கம். இந்த சிறார்கள் பதுங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கிருந்து 400 மது பாட்டில்கள், 500க்கும் மேற்பட்ட காண்டம் பாக்கெட்டுகள், 27 வாகனங்கள், 47 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த குற்றச்சம்பவம் குறித்த விசாரணைக்கு பாஜக துணை தலைவர் பெர்னாட்டு உரிய ஒத்துழைப்பு தர வேண்டும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், தன் மீதான புகாரை பாஜக துணைத் தலைவர் மறுத்துள்ளார். மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளதாக பெர்னார்டு விளக்கமளித்துள்ளார்.

முதலமைச்சர் தான் போட்டியிடும் தொகுதியிலேயே தோல்வியை சந்திக்கப்போகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத பதற்றத்தில் என் மீது களங்கம் கற்பிக்க இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என பாஜக துணைத் தலைவர் பெர்னார்டு குற்றஞ்சாட்டுகிறார். இவர் மீது ஏற்கனவே 25 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைமை இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.