விதிமுறைகளை மீறி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல யூடியூபர் கைது..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தனது பிறந்த நாள் அன்று கைது செய்யப்பட்டுள்ளார். நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாட தனேஜா ஏற்பாடு செய்திருந்த நிலையில், அங்கு நூற்றுக் கணக்கானோர் திரண்டுள்ளனர். நாடு முழுவதும் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், விதிமுறைகளை மீறி கூட்டத்தை கூட்டிய குற்றத்திற்காக இபிகோ 188, 341 மற்றும் சிஆர்பிசி 144 ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், யூடியூபர் கௌரவ் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை செக்டார் 51இல் மேற்கொண்டதால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஒரு கட்டத்தில் நெரிசல் ஏற்படும் அளவிற்கு நிலைமை உருவானது. எனவே, காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டோம் என்று கூறப்பட்டுள்ளது. யூடியூபர் தனேஜாவும் அவரது மனைவியும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மெட்ரோ ரயிலின் ஒரு கோச்சையே ரூ.60,000த்திற்கு புக் செய்ததாகக் கூறப்படுகிறது.

தங்கள் பிறந்தநாள் கொண்டாட்டதின் அறிவிப்பை சமூக வலைதள பக்கங்களில் அவர்கள் வெளியிட்ட நிலையில், ரயில்நிலைய வாசலில் கட்டுக்கடங்காத அளவிற்கு ரசிகர்கள் குவிந்தது, மற்ற பயணிகளுக்கு பெரும் தொந்தரவாக மாறியுள்ளது.கைது செய்யப்பட்ட யூடியூபர் தனேஜாவுக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற யூடியூபர் தனேஜா, ப்ளையிங் பீஸ்ட், பிட் மசில் டிவி உள்ளிட்ட மூன்று யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். பிட்னஸ், தினசரி வாழ்க்கை நல பதிவுகளை தனது யூடியூப் சேனல்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வருகிறார்.

இவரது மனைவி ரிதுவும் ஒரு சமூக வலைதள பிரபலம் ஆவார். இருவரும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான ஸ்மார்ட் ஜோடியில் பங்கேற்று பிரபலமானவர்கள். யூடியூபர் கவுரவுக்கு இன்ஸ்டிராகிராமில் 33 லட்சம் ஃபாலோவர்களும் அவரது மனைவிக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோவர்களும் உள்ளனர்.