ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு : பணிக்கு வராத மருத்துவர் மீது நடவடிக்கை – சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Scroll Down To Discover
Spread the love

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு பணிக்காக இன்று காலை மதுரை விமான நிலையம் வந்த மருத்துவம் மட்டும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் சாலை மார்க்கமாக திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மருத்துவர்கள், ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தவர், சம்பந்தப்பட்ட சுகாதார நிலையத்தின் பொறுப்பு மருத்துவர் ரூபேஷ் குமார் பணிக்கு வராததை கண்டறிந்தார்.

உடனடியாக துறை உயர் அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு, “பொறுப்பு மருத்துவர் நேற்று விடுப்பு எடுப்பதற்கு கடிதம் வாயிலாக அனுமதி பெற்றிருந்த நிலையில், இன்று இரண்டு மணி நேரம் அனுமதி வேண்டி வாய்மொழியாக தெரிவித்திருப்பது முறையல்ல. எனவே, அவர் மீது விசாரித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.