இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கிற ஒரே மனிதர் பிரதமர் மோடி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

Scroll Down To Discover
Spread the love

இலங்கை பிரச்னைக்கு பிரதமர் மோடியால் மட்டுமே தீர்வு காண முடியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது. இதில் பழ நெடுமாறன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவின் சரித்திரத்தை புரட்டி பார்க்கும் போது பாஜக எப்போதும் பிரச்னைக்கு ஒரு அங்கமாக இருந்தது இல்லை. கச்சதீவு விவகாரத்தில் வாஜ்பாய் பேசியது தற்போதும் உள்ளது. தமிழக பாஜக வேண்டாத கட்சியாக வேண்டாத கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.


கால சக்கரத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் 2008 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆக மாற்ற வரம் கேட்டிருப்பேன். போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். அந்த காலகட்டத்தில் இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தூக்கு தண்டனையில் இருந்து ஐந்து தமிழர்களை மீட்டவர் பிரதமர் மோடி. உண்மையான கட்சத்தீவு ஒப்பந்தம் என்பது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக இருந்தாலும் அதை சுற்றி மீன்பிடிக்க நமக்கு உரிமை இருந்தது. அதைத்தான் பிரிவு 6 கூறுகிறது. அவசரநிலை காலகட்டத்தில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக பிரிவு 6-ஐ ரத்து செய்தனர். ஆர்டிகில் 6 ஐ அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும். அது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், 2009 போரில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு தராததால் நம்மை அவர்கள் நம்பாமல் இருந்தனர். தற்போது நிலை மாறிவிட்டது. என்னுடைய மோடி வைரம் என்று எனக்கு தெரியும். ஆனால் அவரை பற்றி யாரும் இங்கு பேசவில்லை. நான் இங்கு பேச வேண்டிய சூழல் உள்ளது. மோடி பேசுவது திரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

இலங்கை தமிழர் விவகாரத்தை பொறுத்த வரை மோடி சரியாக காய் நகர்த்தி வருகிறார். தனி ஈழம் உருவாக்கப்பட்டால் உலகத்தில் சிறிய நாடாக அது தான் இருக்கும். இலங்கைக்கு இதுவரை 20,000 கோடிக்கு மேல் இந்தியா உதவி செய்துள்ளது. மோடி உரக்க பேசினால் அமெரிக்காவே கேட்கும். இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கிற ஒரே மனிதர் நரேந்திர மோடியைத் தவிர யாரும் கிடையாது. ஒரு பாஜக கட்சியை சேர்ந்தவன் என்று கூறவில்லை. ஒரு மனிதனாக கூறுகிறேன் என்று பேசினார்.

தொடர்ந்து மேடையில் பேசயி பழ நெடுமாறன், எந்த சிங்கள மக்கள் ராஜ பக்சேவை பிரதமராக ஆக்கினார்களோ இப்போது அவர்களே ஆட்சியில் இருந்து அகற்ற துடிக்கிறார்கள். சிங்கள மக்களுக்கு பயந்து திருகோணமலையில் பதுங்கி இருக்கிறார் ராஜ பக்சே. இலங்கைப் போரில் கொல்லப்பட்ட மக்களை அங்கேயே புதைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ராஜபக்சேவுக்கு அது கூட கிடைக்காது என நினைக்கிறேன். சொந்த நாட்டிலேயே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். இலங்கையின் இனப் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக ஆக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.