கல்வி கட்டண பாக்கி செலுத்தாத மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

கல்வி கட்டண பாக்கி செலுத்தாத மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 5ம் தேதியும், 10ம் வகுப்புக்கு வரும் 6ம் தேதி, பிளஸ்1க்கு வரும் 10ம் தேதி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, அந்தந்த பள்ளிகளே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.

சில தனியார் பள்ளிகளில், நடத்தை மற்றும் கல்வி கட்டண பாக்கி செலுத்தாதது போன்ற காரணங்களால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாதவாறு, ஹால் டிக்கெட் தராமல் நிறுத்தி வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், கல்வி அலுவலகங்களில் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து, அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘அரசு தேர்வு துறையால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும், பொது தேர்வில் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். இதில் புகார் எழுந்தால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.