உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – 2 ஆண்டுகளுக்கு பின் வெகு விமர்சையாக தொடங்கியது..!

Scroll Down To Discover
Spread the love

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு முதல் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இன்று தேரோட்டம் நடக்கிறது.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. இதையடுத்து இன்று காலை முக்கிய விழாவான திருத்தேரோட்டம் தொடங்கியது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரங்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், அவரை தொடரந்து சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் செல்கின்றனர்.

தேரோட்டத்தையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.