அமர்நாத் புனித யாத்திரை முன்பதிவு துவக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இந்தாண்டு மீண்டும் தொடங்கவுள்ளது.

2022ஆம் ஆண்டு அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த யாத்திரை நடப்பாண்டு ஜுன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக யாத்திரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மீண்டும் யாத்திரை நடைபெறவுள்ளது.

இந்த யாத்திரை தொடர்பான ஆய்வு கூட்டம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா தலைமையில் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அருண் குமார் உள்ள மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய செயலாளர் அபூர்வா சந்திரா, ’இதுவரை இல்லாத அளவிற்கு அமர்நாத் யாத்திரை மிகப் பெரியதாகவும், மேம்பட்டதாகவும் இருக்கும் எனக் கூறினார்.இந்தாண்டு யாத்திரைக்கான எதிர்பார்ப்பு இரண்டு மடங்கு இருக்கும் எனத் தெரிவித்த அவர், நடப்பாண்டில் ஆறு முதல் எட்டு லட்சம் யாத்திரிகர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றார். குடிநீர், தங்கும் வசதி, சுகாதாரம் ஆகியவற்றை முறையாக ஏற்பாடு செய்ய நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டுவருவதாக தெரிவித்த அவர், யாத்திரிகர்களின் பாதுகாப்பு ஏற்படுகளுக்கு பிரதான கவனம் செலுத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் யாத்திரைக்கான முன்பதிவுகள் www.shriamarnathjishrine.com என்ற இணையதளத்தில் செய்யப்படுகிறது. மேலும் யாத்திரிகர்கள் தங்குவதற்காக ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் தங்கும் விடுதி கட்டுப்பட்டுவருகிறது. யாத்திரிகர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய புனித தலமான அமர்நாத் குகை, லிட்டர் பள்ளத்தாக்கில் 12,756 அடி உயரத்தில் உள்ளது.அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயில் சக்தி பீடங்களுள் ஒன்றாகும். 2019ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், இந்தாண்டுதான் யாத்திரை மீண்டும் தொடங்குகிறது.