பிட் காயின் ஊழல் விவகாரம் ; விசாரணைக்கு அமெரிக்க அதிகாரிகள் வருகை – சி.பி.ஐ மறுப்பு..!

Scroll Down To Discover
Spread the love

இணையத்தில் புழங்கும் நாணயமான ‘பிட்காயின்’ முதலீட்டில், கர்நாடக பா.ஜனதா பிரமுகர்கள் ஊழலில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த ஊழலை கர்நாடக பா.ஜனதா அரசு மூடி மறைப்பதாக காங்கிரஸ் கூறியது.

இதற்கிடையே, கர்நாடக போலீசார் விசாரித்து வரும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ.யின் அதிகாரிகள் டெல்லிக்கு வந்திருப்பதாக கடந்த 8-ந் தேதி தகவல் வெளியானது. அது உண்மையா என்று காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், இதற்கு சி.பி.ஐ. நேற்று மறுப்பு தெரிவித்தது.

இதுகுறித்து சி.பி.ஐ. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ‘பிட்காயின்’ வழக்கில் விசாரணை நடத்த எப்.பி.ஐ. எந்த குழுவையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவில்லை. அப்படி அனுப்பி வைக்க எப்.பி.ஐ. சார்பில் சி.பி.ஐ.க்கு எந்த வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை.

அதுபோன்று அனுமதி அளிக்க வேண்டிய கேள்வியே எழவில்லை. ஏனெனில், சர்வதேச போலீசின் இந்தியாவுக்கான தேசிய விசாரணை அமைப்பாக சி.பி.ஐ. செயல்பட்டு வருகிறது. எப்.பி.ஐ. போன்ற சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த தகவல் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது என்று அதில் கூறப்பட்டுள்ளது.