மிசோரத்தில் பன்றிக் காய்ச்சல் – பன்றிகள், பன்றி இறைச்சி பொருட்களுக்கு தடை..!

Scroll Down To Discover
Spread the love

மிசோரம் மாநிலத்தில் புதிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

வட கிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவியது. இதில் மாநிலத்தில் 33,417 பன்றிகள் பலியாயின. பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க 10,910 பன்றிகள் கொல்லப்பட்டன. இதில் மொத்தம் ரூ.60.82 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து பன்றிகள், பன்றி இறைச்சியை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதத்துக்கு பிறகு இந்நோய்க்கு பன்றிகள் எதுவும் பலியாகவில்லை. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் தடை விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது, ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு 384 பன்றிகள் பலியாகி உள்ளன. இதை தொடர்ந்து அடுத்த உத்தரவு வரும் வரை, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து உயிருள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்பட அனைத்து பன்றி இறைச்சி பொருட்கள் இறக்குமதிக்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக மிசோரம் அரசு அறிவித்துள்ளது.