21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – நேபாளம் பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியா – நேபாளம் இடையே, முதல் அகல ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதுார் டியூபா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதுார் டியூபா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து நேபாளத்தில் ரயில்வே, மின்சாரம் ஆகிய துறைகள் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு தரப்பு பேச்சுக்கு பின், மோடி, ஷேர் பகதுார் டியூபா இருவரும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பீஹாரின் ஜெயநகரில் இருந்து, நேபாளத்தின் குர்தா வரையிலான முதல் அகல பயணியர் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். அத்துடன் நேபாளத்தில், இந்தியாவின் ‘ரூபே கார்டு’ பணப் பரிவர்த்தனை சேவையும், மின் பகிர்மான திட்டமும் துவக்கி வைக்கப்பட்டன.

இதையடுத்து இரு நாடுகள் சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா – நேபாளம் இடையே உள்ள தனித்தன்மை வாய்ந்த உறவு உலகில் வேறு எங்கும் காணாதது என, மோடி தெரிவித்துள்ளார். நேபாளத்தின் அமைதி, வளம், வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும். நேபாள மின் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்கேற்பு, எதிர்கால கூட்டுறவுக்கு அச்சாரமாக இருக்கும் என, மோடி தெரிவித்தார்.

இந்தியா – நேபாளம் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, பரஸ்பர செயல் திட்டம் வகுக்க வேண்டும் என, ஷேர் பகதுார் டியூபா வலியுறுத்தினார். இதையடுத்து, எல்லை பிரச்னையை அரசியல் ரீதியாக அணுகாமல், பேச்சு வாயிலாக சுமுக தீர்வு காணலாம் என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முதல் அகல ரயில் பாதை நேபாள எல்லையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் பீஹாரின் ஜெயநகர் உள்ளது

கடந்த, 1937ல் ஜெயநகர் மற்றும் நேபாளத்தின் பிஜல்புரா இடையே 68.7 கி.மீ., துாரத்துக்கு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ல் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஜெயநகர் – பிஜல்புரா குறுகிய ரயில் தடத்தை, அகல ரயில் பாதையாக மாற்ற இந்தியா, 1,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. முதன் முறையாக, பீஹாரின் ஜெயநகர் மற்றும் நேபாளத்தின் குர்தா இடையிலான 34.9 கி.மீ., துாரம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில், 127 சிறிய மற்றும் 15 பெரிய பாலங்கள் உள்ளன.

குர்தாவில் இருந்து பிஜல்புரா வரையிலான, 17 கி.மீ., துாரத்தை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. நேபாள அரசு, கொங்கன் ரயில் நிறுவனத்திடம் இருந்து, 100 கோடி ரூபாய்க்கு இரு ரயில்களை வாங்கியுள்ளது.