இந்து கோவில் கட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தினர்..!

Scroll Down To Discover
Spread the love

பீஹாரில் கட்டப்பட உள்ள உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவிலுக்கு, 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முஸ்லிம் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

பீஹார் மாநிலம், கிழக்கு சம்பரான் மாவட்டம் கைத்வாலியா பகுதியில், உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவிலாக விராட் ராமாயண் மந்திர் கட்டப்பட உள்ளது. பாட்னாவை சேர்ந்த மஹாவீர் மந்திர் அறக்கட்டளை இப்பணிகளை மேற்கொள்கிறது. உயரமான கோபுரங்களுடன் 18 கோவில்களும், சிவன் கோவிலில் உலகின் மிகப்பெரிய லிங்கமும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அறக்கட்டளை சார்பில், 125 ஏக்கர் நிலம் பெறப்பட்டு உள்ளது.

அசாமின் கவுஹாத்தியில் தொழில் அதிபராக இருக்கும் கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்தியாக் அகமது கான் என்பவரும், 2.5 கோடி ரூபாய் நிலத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

இது குறித்து, அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் கூறியதாவது:இஷ்தியாக் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ள நன்கொடை, இரு சமூகத்தினர் இடையிலான சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

அவர்கள் உதவி இல்லாவிடில், இந்த கனவுத் திட்டம் நிறைவேறுவது கடினமாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார். கிழக்காசிய நாடான கம்போடியாவின் அங்கோர் வாட் ஆலயம், உலகின் மிகப்பெரியது என பெயர் பெற்றுள்ளது. விராட் ராமாயண் மந்திர் அதைவிட உயரமாக, 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளதாக தெரிகிறது.