நீதிபதிக்கு கொலை மிரட்டல் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு – ஒருவர் கைது..!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடகாவின் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள கல்வி நிலையத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கல்வி நிலையம் உத்தரவிட்டது. அதற்கு இஸ்லாமிய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்துவந்தனர்.

இந்தவிவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது. இதுதொடர்பாக இஸ்லாமிய மாணவிகள் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கர்நாடகா உயர் நீதிமன்றமும் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக மாணவிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஹிஜாப் வழக்கு தீர்ப்பைக் கண்டித்து, மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் கடந்த 17ம் தேதி போராட்டம் நடைபெற்றது.

அப்போது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா உள்ளிட்டோர், கர்நாடக நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை ரஹமத்துல்லா – மாநிலதணிக்கை குழு உறுப்பினர்,

அசன் பாட்ஷா – மதுரை மாவட்ட தலைவர், ஹபிபுல்லா – மதுரை மாவட்ட துணை செயலாளர் ஆகிய பேர் மீது சாதி, மத, இன சம்பந்தமாக விரோத உணர்ச்சியை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவை ரஹமத்துல்லா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.