உக்ரைனில் இருந்து வங்காளதேச மக்களை மீட்க உதவி – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா..!

Scroll Down To Discover
Spread the love

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 24 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த 2 நாட்களுக்கு பிறகு, அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேசன் கங்கா நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இதன் மூலம் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் என 20 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டனர்.

பிரதமர் மோடியின் வழிநடத்தலின்படி மேற்கொள்ளப்பட்ட ஆபரேசன் கங்கா நடவடிக்கையால், உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகள் மற்றும் குடிமக்கள் பாதுகாப்புடன் அரசு செலவில் நாடு வந்து சேர்ந்தனர்.

இந்த மீட்பு பணிக்கு உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவேக்கியா, மால்டோவா ஆகிய நாடுகளும் உறுதுணை புரிந்தன. இதேபோன்று மத்திய மந்திரிகள் ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, ஹர்தீப்சிங் பூரி, வி.கே.சிங் ஆகியோரும் கடினமான போர்ச்சூழலில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.

இந்தியர்களுடன் சேர்த்து இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளை சேர்ந்த குடிமக்களையும் மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், உக்ரைனின் சுமி நகரில் சிக்கி தவித்த வங்காளதேச குடிமக்களை, இந்தியர்களுடன் சேர்த்து மீட்டு, வெளியேற்றும் பணியில் ஆதரவு கரம் நீட்டிய மற்றும் உதவி செய்த உங்களுக்கும், உங்களுடைய அரசாங்கத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார். நமது இரு நாடுகளும் பல ஆண்டுகளாக தனித்துவமுடன் மற்றும் உறுதியான நட்புறவுடன் இருப்பதற்கு, உங்களுடைய அரசு முழுமனதுடன் அளித்த ஒத்துழைப்பு சான்றாக உள்ளது என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.