தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை என்பதால், மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். காகிதமில்லா நிதிநிலை அறிக்கையாக இதனை அவர் தாக்கல் செய்ய உள்ளார். திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம்தேதி திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தற்போது அவர் இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

கொரோனா காரணமாக வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், வரும் நிதியாண்டில் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது.

மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. விவசாயத்துக்கான நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது.