தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு : சிபிஐ விசாரனை தொடங்கியது..!

Scroll Down To Discover
Spread the love

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியின் விடுதியில் சிபிஐ இணை இயக்குநர் வித்யா டி குல்கர்னி குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலுார் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த ஜனவரி 19-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்கொண்டார்.

இது தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார், மாணவி கொடுத்த புகாரின் பேரில் விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். தற்போது அவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார். பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால்தான், தன் மகள் தற்கொலை செய்து கொண்டார் என, மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை சிபிஐ அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், மாணவி படித்த விடுதி மற்றும் பள்ளியில் இன்று விசாரணையைத் தொடங்கினர். விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் பள்ளிச் சுற்றுப்புற பகுதிகளையும் சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு, விடுதி தரப்பிலும் விசாரித்து வருகின்றனர்.