பஞ்சாபில் பிரதமர் பயண திட்டத்தில்..பாதுகாப்பு குளறுபடி! மத்திய உளவுத்துறை தகவல்களை பஞ்சாப் போலீசார் பின்பற்றவில்லை..!

Scroll Down To Discover
Spread the love

பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நேற்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது. அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ. 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக நேற்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால்,போரட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து உரிய விளக்கம் அளிக்க பஞ்சாப் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமரின் பயண பாதுகாப்பின் போது மத்திய உளவுத்துறை அளித்த தகவல்களை பஞ்சாப் போலீசார் பின்பற்றவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் பயணத்தின்போது போராட்டங்கள் நடைபெறலாம் என உளவுத்துறை பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது. ஆனால், அந்த தகவல்களை பஞ்சாப் போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும், இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு ஏற்படும்போது தேவையான மாற்றுவழிகளை மாநில போலீசார் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், பஞ்சாப் போலீசார் இதுபோன்ற மாற்றுவழிகள் எதையும் தேர்வு செய்யவில்லை.

பிரதமரின் பாதுகாப்பில் சிறப்பு பாதுகாப்பு படையின் வீரர்கள் முதன்மையானவராக உள்ளனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் இந்த பயணத்தின் போது மாநில போலீசார் எஞ்சிய பாதுகாப்பு நடைமுறைகளை கவனிக்க வேண்டும். ஒருவேளை பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் திடீர் மாற்றம் ஏற்படுமாயின் மாநில போலீசார் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு இது குறித்து தகவல் அளிக்க வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தில் மாநில போலீசார் இந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை என மத்திய உள்துறை அமைச்ச அதிகாரி தெரிவித்துள்ளார்.