ஈஷா சார்பில் மரபு வழி கால்நடை மருத்துவ பயிற்சி..!

Scroll Down To Discover
Spread the love

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மரபு வழி கால்நடை மருத்துவ பயிற்சி நேற்று (டிசம்பர் 28 செவ்வாய்க்கிழமை) தஞ்சாவூர் நடேசம்ஸ் விழாப் பொழில் திருமண மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 16   மாவட்டங்களைச் சேர்ந்த  150-க்கும் மேற்பட்ட  விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றனர். அவர்களுக்கு கால்நடை மருத்துவர் பேராசிரியர்.ந.புண்ணியமூர்த்தி அவர்கள் பயிற்சியளித்தார்.

குறிப்பாக விவசாயிகளின் கால்நடைகளான மாடு, ஆடு, கோழி போன்றவற்றை தாக்கும் பலவித நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும்  வழிமுறைகள், அதற்கு அஞ்சரைப் பெட்டியில் உள்ள பொருட்களையும், தோட்டங்களில் கிடைக்கும் மூலிகைச் செடிகளையும் கொண்டு மருத்துவம் செய்து கொள்வது பற்றி விளக்கப்பட்டது. 

இது விவசாயிகளின் நேரத்தையும் செலவையும் பெரும் அளவில் மிச்சப்படுத்தி, வேளாண் தொழிலை லாபகரமாக நடத்தவும் உதவுகிறது.  தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நெல், கரும்பு, வாழை, தென்னை என பயிர் வாரியான சாகுபடி முறை பயிற்சி, பூச்சி மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 12,000-த்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.