கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்…!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

அதன் படி, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா கர்நாடக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

மதமாற்ற தடை சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

* மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும்.

* இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

* சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால் அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* மேலும் தவறு செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அம்சமும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

*அதே போல் கூட்டு மதமாற்றம் செய்தாலும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேற்கண்டவை அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற மசோதா அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து மசோதா சட்டமாக அமலுக்கு வர உள்ளது.