பக்தர்களின் வருகை அதிகரிப்பு – சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

சபரிமலையில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டிச.9 அன்று அதிகளவில் பக்தர்கள் வந்ததாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட கேரளாவின் பல பகுதிகளில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாட்களும் முன்பதிவு முடிந்து விட்டது. முன்பதிவு செய்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் வருவதில்லை. தொடக்கத்தில் வராதவர்கள் அதிகம் இருந்த நிலையில், தற்போது அது குறைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.டிச.9 அன்று அதிக பட்சமாக 36 ஆயிரத்து 279 பேர் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 65 ஆயிரத்து 102 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 771 பேர் தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் அதிகாலை4:45 மணி முதல் தரிசனம் செய்ய அனுமதித்த நிலையில் தற்போது அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்தது முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கும் வரை அன்னதான மண்டபத்தில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

பம்பையில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்குவது இறுதி கட்ட பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பான அறிக்கை பத்தணந்திட்டை கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.