ஒமிக்ரான் வைரஸ் : ஜனவரி 31ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து நீட்டிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

ஒமிக்ரான் அச்சத்தின் காரணமாக வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது வரும் ஜன.31-ம் தேதி வரை விமான சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்களும், வர்த்தக போக்குவரத்துக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டன.

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னர் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டது. தற்போது வரை அந்த நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்குள்ளாக தென் ஆப்ரிக்காவில் உருமாறிய புதிய வகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

ஓமைக்ரான் வைரஸ் அடுத்தடுத்து மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவியது. ஏற்கெனவே ஜிம்பாப்வே, இஸ்ரேல், ஜப்பான், சீனா, மொரீஷியஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 30 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் கால்பதித்து விட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் தங்களது எல்லைகளை மூடியுள்ளன. வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளுக்குள் வர தடை விதித்துள்ளன.

இதன் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவையை ஒத்திவைப்பதாக , விமான போக்குவரத்துத் துறை அறிவித்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச விமான போக்குவரத்து சேவை ரத்தானது, ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.