நார்வேயில் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பல் அறிமுகம்..!

Scroll Down To Discover
Spread the love

நார்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது.

‛யாரா பிர்க்லேண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள 80 மீட்டர் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பல் தெற்கு நார்வேயின் போர்ஸ்கிரன்னில் உள்ள உற்பத்தி ஆலையிலிருந்து 14 கி.மீ., தொலைவில் பிரெவிக்கில் உள்ள ஏற்றுமதி துறைமுக முனையம் வரையிலான சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கப்பல் இந்நிறுவனத்தின் 40 ஆயிரம் டீசல் லாரி போக்குவரத்துக்கு மாற்றாக விளங்கும். இதனால் ஆண்டுக்கு ஆயிரம் டன் கார்பன் வெளியேற்றம் குறையும்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வெய்ன் தோர் ஹோல்ஸ்தர் தெரிவித்ததாவது: மின்சார தானியங்கி சரக்கு கப்பல் மூலம் நாட்டின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் யாரா நிறுவனம் பெரும்பங்கு வகிக்கும்.

மின்சாரம் மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கப்பலை உலகிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்வதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம். இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நீர்வழித்தடங்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கப்பல் முழுமையாக மின்சாரத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் கண்டெய்னர்களை ஏற்றுவது, இறக்குவது, ரிசார்ஜ் செய்வது, சரியான வழித்தடத்தில் பாதுகாப்பாக கப்பலை செலுத்துவது என அனைத்தையும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.