கேரள தங்க கடத்தல் வழக்கு – சிறையிலிருந்து வெளியே வந்தார் ஸ்வப்னா சுரேஷ்..!

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 16 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷ், ஜாமீன் கிடைத்து 3 நாட்களுக்குப் பின் நேற்று விடுதலை ஆனார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் சொப்னா உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சுங்க இலாகா, மத்திய அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புக்கள் (என்ஐஏ) வழக்கு பதிவு செய்தன. கடந்த வருடம் ஜூலை 11ம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சொப்னா மீது காபிபோசா, உபா உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரி ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுங்கத்துறை மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் இவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், என்ஐஏ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் விடுதலையாக முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி என்ஐஏ வழக்கிலம் சொப்னா உள்பட 8 பேருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனுக்கு உயர் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்தது. இதனால், ஜாமீன் கிடைத்து 2 நாட்களுக்கு மேல் ஆகியும் ஸ்வப்னா சுரேஷ் விடுதலையாக முடியவில்லை. ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றப்பட்ட பிறகு, நேற்றுதான் அவர் விடுதலை செய்யப்பட்டார். காலை 11.30 மணியளவில் சொப்னா திருவனந்தபுரம் அட்டங்குளங்கரை சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அவரை வரவேற்க தாயார் பிரபா வந்திருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், பத்திரிகையாளர்களிடம் எதுவும் கூறவில்லை. வழக்கு குறித்து கேட்டபோது, ‘எல்லாம் பின்னர் கூறுகிறேன்,’ என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றார்.