ரேஷன் கடைகள் மூலமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் – மத்திய அரசு திட்டம்

Scroll Down To Discover
Spread the love

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே நேற்று தெரிவித்து உள்ளார். நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டத்தை பாராட்டினர். மேலும் இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும், அதற்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய சுதான்ஷூ பாண்டே, நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கு முன்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறினார்.

நியாய விலைக்கடைகள் மூலம் நிதிச் சேவைகளை வழங்கும் திட்டத்தைப் பாராட்டிய நிதி சேவைகள் துறையின் பிரதிநிதி, நியாய விலைக்கடை டீலர்களுக்கு முத்ரா கடன்களை மூலதனப் பெருக்கத்திற்காக நீட்டித்து, தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த கூட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், நிதிச்சேவைகள் துறை, பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகள், மாநிலங்கள்-யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம் லிட்., இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.